அன்பு (இல்) வருணா,
நலமா ? நாங்கள் நலமில்லை ! நீர் அனுப்பிய நீர் போட்ட ஆட்டத்தில், நார்மலாக கலகலப்பாக இருக்கும் ஐகாரஸ¤க்குக் கூட டிப்ரஷன் வந்து, உங்களுக்கு ஒரு லெட்டர் தட்டி விட்டுள்ளார்! பிரகாஷ் கூறியது போல், நான் கூட ஓரிரு தடவை, மழையில் மாட்டிக் கொண்டபோது, "சனியன் பிடித்த மழை" என்று கோபத்தில் உம்மைத் திட்டியிருக்கிறேன். அதற்காக இவ்வளவு பெரிய தண்டனையா ? நானும் (என் பங்குக்கு) இந்த மடலை எழுதுவதற்குக் காரணம், பலர் சேர்ந்து எடுத்துரைத்தாலாவது, தமிழக மக்களுக்கு உம்மால் ஏற்பட்ட அவதியை புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கை தான் ! தைரியசாலியான டோண்டு ராகவன் கூட, தண்ணீர் புகுந்த தன் நங்கநல்லூர் வீட்டில் கலவரத்தில் இருக்கிறார் என்பது அவரது "மழை"ப் பதிவுகளில் தெரிகிறது !
கடந்த சில வருடங்களாக கோயில் கோயிலாக பூசை செய்தும், தமிழகம் பக்கம் எட்டிப் பார்க்காத தாங்கள், இவ்வருடம் முன்னதாகவே அழையாத விருந்தாளியாக வந்து, பொழிந்து தள்ளி விட்டதன் விளைவாக, தமிழ்நாடு அமிழ்நாடாகி விட்டது, சென்னை நீர் நிரம்பிய தொன்னை போல் காட்சியளிக்கிறது! ஏதோ வந்தோமா, ரெண்டு காட்டு காட்டினோமா, போனோமா என்றில்லாமல், இப்படி அழும்பு பண்ணினால் எப்படி ? உமது கைங்கர்யத்தால், இவ்வளவு நாள் பெயர் கேள்விப்படாத ஏரிகளும், குளங்களும், குட்டைகளும் நிரம்பி வழிவதை பார்க்கிறோம் !
சாலைகள் சீரழிந்து, பல கிராமங்கள் விழுங்கப்பட்டு, பயிர்களையும், உயிர்களையும் இழந்து, உங்களால் எம் மக்களுக்கு ஏற்பட்ட பேரிழப்பு உம்மைத் தொடவில்லையா ? நிலைமை ஓரளவு சீரடையவே பல மாதங்கள் ஆகும் என்று தோன்றுகிறது, பல கோடி செலவு செய்து பொருளாதாரத்தையும் சீரமைக்க வேண்டும். தொடர்ந்து, ககன்தீப் சிங் போன்ற நல்ல, திறமையான மாவட்ட ஆட்சியாளர்களையே நீர் பாடாய் படுத்துகிறீர்! அவர்களும் அயராது மக்கள் துயர் துடைக்க போராடி வருகின்றனர்.
நீர் அடித்த லூட்டியால், எப்போது போல, ஏழை மக்களும், நடுத்தர மக்களும் பெரும்பாதிப்புக்கு உள்ளாகி பரிதவிக்கின்றனர். எப்போது போல், அரசியல்வாதிகள், மழையால் ஏற்பட்ட மக்கள் பிரச்சினைகளை வைத்து, வரும் தேர்தலை எதிர் கொள்வதைப் பற்றி யோசித்து வருகின்றனர்! நிவாரணப் பணிகளை மேற்கொள்வதிலாவது, ஆட்சியில் உள்ள அதிமுகவினரும், திமுகவினரும் இணைந்து செயல்படுவார்கள் என்ற உம் எண்ணத்தில் மண் தானே விழுந்தது ?!? ஊடக வெளிச்சத்தில் இருக்க வேண்டும் என்ற உமது பேராசையால், தற்போது, முப்பது நிமிடச் செய்திகளில், 27 நிமிடங்கள் தமிழகத்தில் உங்கள் கொட்டம் பற்றிய பேச்சு தான் ! வருண உபயத்தில், தமிழக வானிலை மையமும், அதன் இயக்குனரும் கூட ஊடக வெளிச்சத்தில் !
இந்த வாரத்தின் முதல் நான்கு நாட்கள் மழையின்றி சற்று உலரத் தொடங்கியிருந்த சென்னையில், சரியாக டெஸ்ட் மேட்ச் தொடங்கவிருக்கும் அன்று, Baaz-யை ஓர் உலுக்கு உலுக்கி, பேய் மழையை வரவழைத்து, கிரிக்கெட் ரசிகர்களை கடுப்படித்தீர்கள் ! உமக்கும், இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கும் உள்ள பிரச்சினையில், எங்களை இப்படி அலைக்கழிக்கலாமா ? நீங்கள் ஹை பிரஷரில் பீடிக்கப்பட்டதாலோ என்னவோ, வங்கக் கடல் மேலே எந்நேரமும் லோ பிரஷர் !
திருப்பாவை நாச்சியார், "மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய் (ரொம்பாவாய் அல்ல!)" என்று தானே உம்மை வேண்டினார் ? மாறாக, ஐப்பசி, கார்த்திகை மாதங்களிலேயே மக்களை தண்ணீரில் மூழ்கடித்து மூச்சுத் திணற வைத்து இப்படி பாடாய் படுத்தினால், மார்கழியில் நீராட தெம்பு வேண்டாமா ? "வாழ உலகினில் பெய்திடாய்" என்பதை "தாழ உலகினில் பெய்திடாய்" என்று புரிந்து கொள்ளுதல் முறையா ?
இறுதியாக, "துளித்துளி துளித்துளி மழைத்துளி, அது தொடத் தொட சிலிர்த்தது மலர்க்கொடி", "மழையே, மழையே இளமை முழுதும் நனையும் வரையில் வா", "மழை வருது மழை வருது குடை கொண்டு வா, மானே உன் மாரப்பிலே", "பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம், நீயும் ஒத்துக்கிட்டு கூட வர வேணும்", "நீ வரும்போது நான் மறைவேனா" என்று அன்று முதல் இன்று வரை தொடர்ந்து எங்கள் திரைப்படங்களில் கதாநாயகிகளை மழையில் நனைய வைத்து, உம்மைக் குஷிப்படுத்தியதற்கு நீர் காட்டும் நன்றி விசுவாசம் இது தானா ?!?
என்னவோ போங்க, ஒண்ணும் சரியில்ல !
என்றென்றும் அன்புடன்
பாலா
பி.கு: எனக்கென்னவோ, தேவைக்கு அதிகமாக மழை பெய்து விட்ட நிலையில், வானிலை மையம் தினமும் (குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாகிறதோ இல்லையோ!) "இன்று கனமழை பெய்யும், பலத்த காற்று வீசும்!" என்று சும்மாங்காட்டியும் அறிக்கை விட்டாலே, வருணன் தன் வேலையை நிறுத்திக் கொள்வார் என்று தோன்றுகிறது ! தற்போதைய சூழலில், வானிலை மையத்திடம் கேட்டுப் பார்த்தால், இதற்கு ஒப்புக் கொள்வார்கள் என்றே நினைக்கிறேன் ;-)
சற்று சீரியஸாக, மழையால் பாதிக்கப்பட்ட ஏதாவது ஒரு கிராமத்திற்கு, நாம் கூட்டாக, ஒரு சிறிய அளவில் உதவி செய்யலாமே. உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.